Friday, February 19, 2010


உங்களது முதல் பட வாயப்பு பற்றி...?
"நான் மும்பையில் படித்துக் கொண்டிருக்கும்போது என் கிளாஸ் டீச்சர் மூலம் ஹிந்தி படமொன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்குப் பதிமூன்று வயது. தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். அப்போது சின்ன வயசு என்பதால், வெயிட்டான வேடங்கள் செய்ய கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

இருந்தாலும் சினிமா மீடியாவை விட, மனசு வரவில்லை. அடுத்தடுத்து சில ஹிந்திப் படங்களில் நடித்தேன். அந்த ஹிந்திப் படங்களைப் பார்த்து தெலுங்குப் படங்களில் நடிக்க அழைத்தார்கள். தெலுங்கில் தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்தேன்.

அப்போதுதான் தமிழ் "கேடி"யில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து "வியாபாரி", "கல்லூரி", "படிக்காதவன்", "அயன்", "பையா", "கண்டேன் காதலை" படங்கள். தற்போது கொஞ்சம் பிஸியாக இருப்பதால் சென்னையில் வீடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ரொம்பவும் ரசித்து நடித்த படம்...?

என்னோட கேரியரில் சிறந்த படம் எது என்றால் அது "கல்லூரி"தான். எல்லோரும் நான் நடித்த, "ஹேப்பி டேஸ்" என்ற படத்தை பிரமாதம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ரொம்பவும் அனுபவித்து நடித்த படம் "கல்லூரி"தான்.

பள்ளியில் படிக்கும்போதே சினிமாவுக்கு வந்துவிட்டதால் என்னால் கல்லூரி கலாட்டாக்களை என்ஜாய் பண்ண முடியவில்லை. அந்த உணர்வுகளை "கல்லூரி" படத்தில் நடிக்கும்போது அனுபவித்தேன். இப்போதும் கூட ஓய்வு கிடைக்கும்போது "கல்லூரி" படத்தைப் பார்ப்பேன்.

தமிழைப் பொறுத்தவரை நீங்கள் ராசியில்லாத நடிகையாமே?

இப்படிச் சொல்லிக்கொண்டு எத்தனைப் பேர் கிளம்பியிருக்காங்க? அப்படி என்றால் என்னுடன் "கேடி" படத்தில் நடித்த இலியானாவை பற்றி என்ன சொல்வீர்கள்? "கேடி" தோல்விப் படம் என்றாலும் அடுத்து நான் நடித்த "வியாபாரி", "யார் இந்தப் பொண்ணு?" என்று என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அது மாதிரி என் அழகைவிட, "நன்றாக நடிக்கத் தெரிந்த பொண்ணு" என்று அடையாளம் காட்டியது "கல்லூரி". தேங்ஸ் டு பாலாஜி ஸார். இப்படி ஒவ்வொரு படமும் என்னோட கிராஃப்ல உயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ராசியில்லாத நடிகை என்று நினைத்திருந்தால் என்னை எப்போதோ வீட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் இவ்வளவு படங்களில் நடித்திருக்க முடியாதே!

"அயன்" படத்தில் சூர்யாவுடன் இணைந்த நீங்கள், அடுத்து அவரது தம்பி கார்த்தியுடன் "பையா"வில் இணைந்திருக்கிறீர்களே?

அதிலென்ன தப்பு? ஸ்ரேயா, ரஜினி ஸார் கூட "சிவாஜி'" படத்துல நடித்துக் கொண்டிருக்கும்போதுதானே "திருவிளையாடல்" படத்தில் தனுஷூடனும் நடித்துக் கொண்டிருந்தார்? இது சினிமா. ஒவ்வொரு படத்திலும் நாம் ஏற்கும் கதாபாத்திரத்தோட தன்மையை மட்டும்தான் பார்க்கணும்.

சூர்யா ஸார் மிஸ்டர் க்ளீன், ரொம்ப நல்ல மனிதர். நடிப்பு சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். கார்த்தி ரொம்ப ஸ்மார்ட். பாலாஜி சக்திவேல் ஸாரும், கே.வி.ஆனந்த் ஸாரும் கொடுத்த பயிற்சி என்னை தமிழ் சினிமா உலகில் இன்னும் நிறைய நாட்கள் நீடிக்க வைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

"பையா"வில் நயன்தாரா நடிக்கவிருந்த பாத்திரத்தில்தானே நீங்கள் நடிக்கிறீர்கள்... அது பற்றி?

அது போன்று, நான் நடிக்க வேண்டிய சில படங்கள் என் கைநழுவிப் போயிருக்கின்றன. அதில் வேறு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அதுமாதிரிதான் இதுவும். நயன்தாரா "பையா" படத்தில் நடிப்பது பற்றி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போது என்னிடம் வந்து நடிக்கக் கேட்டார்கள்.

ஆனால் அப்போது நான் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு பிரச்சினைகளெல்லாம் முடிந்த பிறகு வந்து பேசியபோதுதான் அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்?

இதுவரைக்கும் நான் யாரையும் காதலிக்கவில்லை. காரணம், சினிமாவில் காதலிக்கிறதுக்கே எனக்கு நேரம் போதவில்லை. "பையா"வோட ஷூட்டிங் பாதிதான் முடிஞ்சிருக்கு. அடுத்து பரத் கூட "கண்டேன் காதலை" படத்தில் நடிக்கிறேன்.

இது "ஜப் வி மெட்" ஹிந்திப் படத்தின் ரீ-மேக் என்பதுதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே? மற்ற மொழிகளைவிட தமிழ் எனக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த முறை உங்களுக்குப் பேட்டி கொடுப்பதற்குள் சுத்தமான தமிழில் பேச கற்றுக் கொள்ளுவேன்.

உங்கள் அழகின் ரகசியம்?

என்னோட சினிமா பிரவேசத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என் கலர்தான். நான் சிந்தி இனத்தைச் சேர்ந்தவள். சிந்திகாரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் விரதம் இருப்பார்கள். அதை நானும் கடைபிடிக்கிறேன்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு ஜூஸ் குடிப்பேன். படப்பிடிப்பு இல்லையென்றால் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது தூங்குவேன். இதெல்லாம்தான் என் அழகின் ரகசியம் என்று நினைக்கிறேன்" என்றார் தமன்னா.

0 comments:

Post a Comment